ஷ அலம், டிச 1 — ஹாட் யாய், தாய்லாந்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் சேதமடைந்து இழுத்து வரப்படும் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு சிறப்பு பரிசோதனைகளை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையம் (AKPS) மேற்கொள்ள உள்ளது.
இந்த பரிசோதனையில் தேர்ச்சி பெறாத எந்த ஒரு வாகனமும் புக்கிட் காயு ஹித்தாம் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தை கடக்க அனுமதிக்கப்படாது.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணைய அதிகாரி அல்லது மேற்பார்வையாளர் கையொப்பமிட்ட சரிபார்ப்பு ஆவணங்களைப் பெற்று, பரிசோதனையில் தேர்ச்சி பெற்ற வாகனங்கள் மட்டுமே ICQS வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் என புக்கிட் காயு ஹிந்தாம் AKPS தலைவர் முகமட் நஸ்ருதீன் முகமட் நாசிர் தெரிவித்தார்.
“வெள்ளக் காலத்தில் முக்கிய எல்லைச் சோதனைச் சாவடிகளில் கடத்தல் அபாய அதிகரிப்பை AKPS நன்கு அறிந்துள்ளது. எனவே, கடத்தல் முயற்சிகளையும் தடுக்க நாங்கள் விரிவான சோதனைகளை நடத்துகிறோம்,” என அவர் பெரித்தா ஹரியானிடம் கூறியுள்ளார்.
மலேசியா–தாய்லாந்து எல்லை ஒருங்கிணைப்பு அலுவலகம் (MTBCO), ஹாட் யாயில் கடுமையான வெள்ளத்தால் சிக்கியுள்ள சுமார் 1,000 மலேசிய வாகனங்களை மீண்டும் கொண்டு வர 15 இழுவை லாரிகளை ஒருங்கிணைத்து உள்ளது.
“இந்த இழுவை நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்ட கூடும் இடம் ஒன்றை அமைக்க மலேசிய துணைத் தூதரகம் (சோங்கிளா) மற்றும் புக்கிட் காயு ஹித்தாம் AKPS ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு புதிய சாடாவோ–புக்கிட் காயு ஹிதாம் சுங்க, குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது,” என்று நஸ்ருதீன் விளக்கினார்.
இந்த கூடும் இடம், AKPS குழுக்களுக்கு அங்கிருந்தபடியே வாகனங்களைச் சோதிக்க அனுமதிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாரும் இந்த நிலையைப் பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்த முடியாதபடி தடுக்கப்படுகிறது.
“பொதுமக்களின் பாதுகாப்பையும் தேசிய சொத்துக்களையும் உறுதிப்படுத்துவதற்காக வாகன மாற்று செயல்பாடு சீராக நடைபெற வேண்டும். இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் விரைவில் நடைபெறும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நடவடிக்கையில் AKPS உடன் சேர்ந்து ஈடுபடும் மற்ற அமைப்புகளில் மலேசிய அரச காவல்துறை (PDRM), தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் (AADK), மலேசிய சுங்கத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்து துறை (JPJ) ஆகியவையும் அடங்குவதாக நஸருடின் கூறினார்.


