கோத்தா கினபாலு நவ 30 ; ஜிஆர்எஸ், கூட்டணிக் கட்சிகள் 17-வது சபா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களும் இணைந்து எளிய பெரும்பான்மையுடன் மாநில அரசை அமைத்துள்ளனர்.
ஜிஆர்எஸ் துணைப் பொதுச்செயலாளர் டத்தோ அர்மிசான் முகமட் அலி கூறுகையில், ஜிஆர்எஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் இன்று அதிகாலையில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். மாநில அரசை அமைக்க ஆதரவு அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நடைபெற்றது.
“இன்ஷா அல்லாஹ், ஜிபிஆர்எஸ், அதன் கூட்டணிக் கட்சிகளும், சட்டமன்றம் கலைப்பதற்கு முன்பு ஜிஆர்எஸ் உடன் இருந்த அனைத்து சுயேச்சை உறுப்பினர்களும் சபா மக்களின் ஆணையையும் நம்பிக்கையையும் விரைவாக நிறைவேற்றுவோம்” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். நேற்றைய தேர்தலில் சுலாமான் தொகுதியைத் தக்கவைத்த ஹாஜி ஜி நூர், அதிகாலை 3 மணியளவில் இஸ்தானா ஸ்ரீ கினபாலுவில் யாங் டிபெர்துவா நெகிரி துன் மூசா அமான் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
73 மாநில தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஜிஆர்எஸ் 29 இடங்களையும், வாரிசான் 25 இடங்களையும், பாரிசான் நேஷனல் 6 இடங்களையும், சுயேச்சைகள் 5 இடங்களையும், உப்கோ 3 இடங்களையும், ஸ்டார் 2 இடங்களையும் வென்றன.
பெரிக்காத்தான் நேஷனல், கேடிஎம், பாக்காத்தான் ஹரப்பான் ஆகியவை தலா ஒரு இடத்தைப் பெற்றன. மாநில அரசமைக்க எளிய பெரும்பான்மைக்கு 37 இடங்கள் தேவை. இதற்கிடையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், புதிய ஆணையுடன் மாநில அரசை அமைத்த ஹாஜி ஜி நூருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தலில் மக்கள் தெளிவாக மாற்றத்தைக் கோரியதாகவும், கடந்த கால அநீதிகளையும் புறக்கணிப்பையும் சுட்டிக் காட்டியதாகவும் அவர் கூறினார்.கடந்த மூன்று ஆண்டுகளில் சபாவின் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றியதாகவும், எம்.ஏ.63 ஒப்பந்தம் தொடர்பாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அன்வார்தெரிவித்தார்.
மடாணி அரசு சீர்திருத்தப் பாதையில் உறுதியாக இருக்கும், சபா இனி ஒதுக்கப்படாத செழிப்பான, நீதியான மாநிலமாக மாறும் என்றும் அவர் உறுதியளித்தார்.“சபா மக்களின் குரல் என்பது நாம் மிக உயர்ந்த பொறுப்புணர்வுடன் காப்பாற்ற வேண்டி உள்ளது” என்று பிரதமர் கூறினார்.


