சுங்கை பட்டாணி, நவம்பர் 28 — தாய்லாந்து ஹாட் யாயில் வெள்ளத்தில் சிக்கிய மலேசியர்களை மீட்கும் பணியில் ஐந்து நாட்கள் ஈடுபட்ட பிறகு ஜோகூர் , பேராக் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் இருந்து வருகை தந்த 45 மலேசிய தன்னார்வ தொண்டு குழு நேற்று இரவில் தனது பணியை நிறைவு செய்தது.
இந்த குழு இன்று நாட்டிற்கு திரும்புவதாகவும், வடபகுதி மாநிலங்களில் இருந்து வந்த சில குழுக்களும் இதில் இணைந்து உள்ளதாகவும் சுங்கை பட்டாணி தன்னார்வ தீயணைப்பு துறையின் தலைவர் லியோங் பெங் தாட் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் சில மலேசியர்கள் உள்ளனர், ஆனால் தாய்லாந்து ராணுவம் சில இடங்களை ஆபத்தான பகுதிகள் என அறிவித்து நுழைவதை தடை செய்ததால் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து எந்த புதிய உதவி கோரிக்கைகளும் தாய்லாந்து ராணுவம் மற்றும் போலீசிற்கு அனுப்பப்படும் என்று அவர் இன்று கூறினார்.
மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தன்னார்வலரும் வெள்ளத்தில் சிக்கிய மலேசியர்களுக்கு உதவுவதற்காக மிகுந்த உறுதிப் படுத்தலுடன் செயல்பட்டுள்ளனர். பணியின் போது சில உறுப்பினர்கள் காயமடைந்தாலும், வெள்ளத்தில் சிக்கிய பல மலேசிய சுற்றுலா பயணிகளை மீட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் கூறினார்.
நேற்று வரை, இந்த மீட்பு குழு ஹாட் யாயில் வெள்ளம் தாக்கிய பகுதிகளில் சிக்கிய குறைந்தது 1,500 மலேசியர்களை மீட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


