ஷா ஆலம், 27 நவம்பர்: கோல சிலாங்கூரில் உள்ள ஈஜோக் நீர்ப்பாசனக் கட்டுப்பாட்டு நிலையம் இன்று காலை 9.15 மணிக்கு நீர்மட்டம் அபாய நிலையை எட்டியுள்ளது. அந்த நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட நீர்மட்டம் 4.02 மீட்டர் ஆகும், இது வெள்ளம் ஏற்படும் வாய்ப்பை காட்டுகிறது என்று சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) தெரிவித்துள்ளது .
மேலும், கோல சிலாங்கூரில் இன்னும் மூன்று நிலையங்களில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது. அவை ரந்தாவ் பஞ்சாங் (5.76 மீ), கம்போங் ஆசாஹான் (3.35 மீ) மற்றும் பாரிட் மஹாங்க் (3.5 மீ) ஆகும்.
உலு சிலாங்கூரில், எஸ்.கே.சி பாலம் நிலையமும் 18.66 மீட்டர் அளவில் எச்சரிக்கை நிலைக்குத் தண்ணீர்மட்டத்தை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், சமூக நலத்துறை (JKM) பேரிடர் தகவல் தளத்தின் படி, தற்போது சிலாங்கூரில் மொத்தம் 15 தற்காலிக மையங்கள் (PPS) திறக்கப்பட்டுள்ளன. இதில் 643 தற்காலிக தங்குமிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு RM500 என்ற ஆரம்ப உதவி இந்த வாரம் முதல் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.


