கோலாலம்பூர், நவ 26- மலேசிய ஒப்பந்தம் 1963 (MA63)-க்கு இணங்க, சபா மற்றும் சரவாக் ஆகியன கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் 'மாநிலங்கள்' (States) என்றே வரையறுக்கப்பட்டுள்ளன எனச் சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான அமைச்சர் அஸாலினா ஓத்மான் சைட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
MA63-இன் முதல் பிரிவானது, "வடக்கு போர்னியோ (சபா), சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை மலாயாக் கூட்டமைப்பின் தற்போதைய மாநிலங்களுடன் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மாநிலங்களாக இணைக்கப்பட்டு, அதன் பிறகு கூட்டமைப்பு 'மலேசியா' என்று அழைக்கப்படும்" என்று தெளிவாகக் கூறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்
. மேலும், சபா மற்றும் சரவாக் ஆகியவற்றை 'மாநிலங்கள்' என்று குறிப்பிடுவது 1963ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவாதங்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் (Hansard) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களை 'மாநிலங்கள்' என்பதிலிருந்து 'பிராந்தியங்கள்' (Regions) அல்லது வேறு ஒரு பெயராக மாற்றும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து ஸ்டாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் சியெங் ஜென் (Chong Chieng Jen) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஸாலினா பதிலளித்தார்.


