ஷா ஆலம், 22 நவம்பர்- கடந்த நவம்பர் 14 ஆம் தேதி சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமுதாயம் நன்மை அடையும் வகையில் உள்ளது என்று சிலாங்கூர் மாநில மனித வளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசு, இந்திய சமூக முன்னேற்றத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான நிதியை 2.7 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது. இது, இவ்வாண்டின் 2.185 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் அதிகமாகும்.
சிலாங்கூர் அரசு, குறிப்பாக பி 40 மாணவர்கள் தரமான கல்வியில் இருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்ய முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மொத்த ஒதுக்கீட்டில், 1.2 மில்லியன் ரிங்கிட் பி 40 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து பயண உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 1.5 மில்லியன் ரிங்கிட் உயர் கல்வி நிறுவனங்களின் கட்டண உதவித் திட்டத்திற்காக வழங்கப்படுகிறது.
அத்துடன் மாநில அரசின் இந்திய பண்டிகைகளுக்கான அங்கீகாரமாக உகாதி மற்றும் வைசாகி விழாக்களை சிறப்பு கொண்டாட்ட பட்டியலில் இணைத்துள்ளது. இந்த பண்பாட்டு ஆதரவு, வெறும் கொண்டாட்டத்தை மட்டும் குறிக்கவில்லை. இது இந்திய சமூகத்தின் ஒற்றுமையையும் பண்பாட்டு அடையாளத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.




