ஷா ஆலாம், மார்ச் 2- சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பி40 பிரிவைச் சார்ந்த இந்திய மாணவர்களின் உயர்கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கில், 2026-ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டண உதவித் திட்டத்தை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மலேசிய இந்தியராகவும் மலேசியப் பிரஜையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர் மாநிலத்திலேயே பிறந்தவர்களாகவோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் இம்மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவோ இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் 25 வயதுக்கு மிகாதவர்களாகவும், அவர்களின் குடும்ப மாத வருமானம் 3,000 ரிங்கிட்டிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்ற விதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மலேசியத் தகுதிக்காண் முகமையால் (MQA) அங்கீகரிக்கப்பட்ட பொது அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் முழுநேர டிப்ளோமா அல்லது இளங்கலைப் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு பயிலும் டிப்ளோமா மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
ஏற்கனவே மாநில அரசு அல்லது இதர நிதி நிறுவனங்களிடமிருந்து முழுமையான கல்வி உதவித்தொகை அல்லது கடனுதவி பெறுபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தும் வரும் மார்ச் 13, 2026, வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்குள் நிர்வாக அலுவலகத்திடம் நேடியாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு மாணவர்கள் ஷா ஆலம், SSAAS கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்புமிகு வீ. பாப்பாராய்டு அவர்களின் அலுவலகத்தை நேரிலோ அல்லது வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.








