கோத்தா கினபாலு, 22 நவம்பர் - பல்வேறு சமூகத்தினர் வசிக்கும் சபா மாநிலத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தொடர்ந்து ஒற்றுமையாக செயல்படுவதில் அவர்கள் ஒருபோதும் தவறியதில்லை.
ஒற்றுமையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், 30-க்கும் மேற்பட்ட இனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுபான்மை சமூகத்தையும் உட்படுத்திய மாநிலத்தின் கலாச்சாரத்திற்கும் இந்திய சமூகம் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது.
வளமான வாழ்க்கைக்கு மட்டுமல்லாது குடும்பத்தை வளர்ப்பதற்கும் சபா மாநிலம் தகுந்த இடமாக இருக்கிறது என்று சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் அம்மாநில மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் ஜி. மோகன் தெரிவித்துள்ளார்.
"இங்குள்ள மக்கள் நட்புறவுடன் பழகக் கூடியவர்கள். இனம், மதம், அரசியல் பின்னணி, கலாச்சாரம் என்று அனைத்திலும் மிக உயர்ந்த சகிப்புத்தன்மையும் கொண்டுள்ளனர்," என்றார் அவர்.
2025-ஆம் ஆண்டில் சபா மக்கள் தொகையில், இந்திய சமூகத்தின் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது.
மாநிலத்தின் மிகச் சிறிய சமூக குழுக்களில் ஒன்றாகவும் இது அமைந்திருக்கிறது.




