சண்டாக்கான், நவ 21- சபா மாநிலத்தை சபா ஜி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தை மக்கள் மாற்றினால், சபா மாநிலத்தின் வளர்ச்சி தோல்வியடையும் அபாயம் உள்ளதாகப் பார்ட்டி ககாசான் ரக்யாட் சபாவின் துணைத் தலைவர் மசியுங் பனா எச்சரித்துள்ளார்.
புதிய நிர்வாகத்துடன் ஒப்பிடுகையில், GRS அரசாங்கத்திடம் ஏற்கனவே தொடரக்கூடிய திட்டங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.
ஒரு புதிய அரசாங்கம் தனது நிர்வாகத்தை அமைப்பதற்கு வழக்கமாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தேவைப்படும், இது இறுதியில் மக்களைப் பாதிக்கும்.
“அரசாங்கம் மாறினால், கொள்கைகளும் மாறும். நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் பாதிக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம். இதனால் மக்கள் தான் இழப்பைச் சந்திப்பார்கள்,” என்று சண்டக்கான் செக்கோங் மற்றும் சுங்கை சிபுகா சட்டமன்றத் தொகுதிகளின் GRS வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த பின் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் 29 அன்று நடைபெறவுள்ள சபா மாநிலத் தேர்தலில் செக்கோங்கில் டயானா ஹம்தான் டியாகோவையும், சுங்கை சிபுகாவில் அமீர் ஷா யாகோப்பையும் GRS களமிறக்கியுள்ளது.
சபாவின் வளர்ச்சி தடையின்றித் தொடரவும், தற்போது அனுபவித்து வரும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் GRS நிர்வாகத்தின் தொடர்ச்சி அவசியம் என்று மசியுங் பனா வலியுறுத்தினார்.


