ஷா ஆலம், நவ 21- சிலாங்கூர் மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சித் திட்டமான இராண்டாவது சிலாங்கூர் திட்டம் (RS-2) மற்றும் ஆசியான் சந்தைகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவை மாநிலத்தின் பொருளாதாரப் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கான முக்கியத் தூண்களாக இருக்கும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த, சிலாங்கூர் பிராந்திய அணுகுமுறையை எடுத்து தனது பொருளாதார உத்தியை மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் சமீபத்திய ஆசியான் தலைமைப் பதவி மூலம் உருவான புதிய வர்த்தக ஒப்பந்தங்கள், டிஜிட்டல் பொருளாதார முன்முயற்சிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் போன்றவற்றைச் சிலாங்கூர் ஆராய்ந்து பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசியான் நாடுகளுக்குத் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் உள்ளூர் நிறுவனங்கள், அடுத்த ஆண்டு முதல் பிராந்தியச் சந்தைகளை ஆராய உதவத் தயாராக உள்ள இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற அவர் ஊக்குவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 1,470 திட்டங்கள் மூலம் சிலாங்கூர் RM51.9 பில்லியன் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைப் பதிவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த முதலீட்டில் 30% ஆகும். இந்தச் சாதனை சிலாங்கூரின் மீதான முதலீட்டாளர்களின் வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள RS-2 திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலத்தின் சமூகப் பொருளாதார திசையை அமைக்கும். மேலும், முதலீட்டை அதிகரிக்கும் முக்கியத் திட்டங்களில் தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பகுதி (Idriss), சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதி (Sabda), மற்றும் ஏழு மேலாண்மை செய்யப்படும் தொழிற்பூங்காக்கள் (MIP) ஆகியவை அடங்கும்.
கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்பீட் சிலாங்கூர்’ (Speed Selangor) கொள்கை, வணிக ஒப்புதல் செயல்முறையை மூன்று மாதங்களில் இருந்து வெறும் 14 நாட்களாகக் குறைத்தது, முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் என்றும், இது ஆரம்பத்தில் மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E), விண்வெளி மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற மூலோபாயத் துறைகளில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் செததியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் நடந்த சிலாங்கூர் முதலீட்டாளர் பாராட்டு விருதுகள் (SIAA) 2023-2024 நிகழ்வில் தெரிவித்தார்.




