கோலாலம்பூர், நவ 21- ஆசியக் காற்பந்து கூட்டமைப்பான AFC, மலேசியக் காற்பந்து சங்கம் FAM, சிலாங்கூர் எஃப் சி. மற்றும் ஜொகூர் டாருல் தக்சிம் ஆகிய தரப்புக்கு எதிராக அபராதம் விதிக்கும் நடவடிக்கையை எடுத்தது.
ஆசியக் கோப்பை 2027 தகுதிச்சுற்று, ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் (ACLE) மற்றும் ஆசிய சாம்பியன்ஸ் லீக் 2 (ACL2) போட்டிகளில் விதிகளை மீறியதைத் தொடர்ந்து AFC-இன் ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் லாவுஸுக்கு எதிரான ஆசியக் கோப்பை 2027 தகுதிச் சுற்றில் AFC போட்டிச் செயல்பாடு கையேட்டின் பிரிவு 2.2-இன் கீழ் தவறு செய்ததற்காக FAM-க்கு USD1,875 (RM7,788) அபராதம் விதிக்கப்பட்டது.
FAM பிரதிநிதிகள் ஆட்டத்தின் இரண்டாம் பாதியைத் தொடங்க 2 நிமிடங்கள் 30 வினாடிகள் தாமதப்படுத்தியதே இதற்குக் காரணம். இந்த அபராதத்தை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று AFC ஒழுங்குமுறைக் குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்து 11 முறை சூப்பர் லீக் சாம்பியனான JDT, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஜப்பானிய கிளப்பான FC Machida Zelvia-க்கு எதிரான ACLE போட்டிக்கான அதிகாரப்பூர்வப் பயிற்சி தளத்தில் 'தூய்மையான மைதானத்தை' (Clean Stadium) வழங்கத் தவறியதால் USD5,000 (RM20,783) அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 23ஆம் தேதி பெர்சிப் பாண்டுங்கிற்கு எதிரான ACL2 போட்டியில், சிலாங்கூர் எஃப்சி பிரதிநிதிகள் இரண்டாம் பாதியைத் தொடங்க 1 நிமிடம் 20 வினாடிகள் தாமதப்படுத்தியதால், கிளப்-க்கு USD1,250 (RM5,195) அபராதம் விதிக்கப்பட்டது. JDT மற்றும் சிலாங்கூர் எஃப்சி ஆகிய இரண்டும் இந்தக் கட்டணத்தை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.




