ஷா ஆலம், நவ 19 — தற்போது உள்ள சிலாங்கூர் உணவுக் கிடங்கின் (GMS) ஒரு மாத அரிசி சேமிப்பு திறன், மூன்று மாதங்களுக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உயர்த்தப்பட உள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த கிடங்கு தற்போது சிலாங்கூர் மக்களின் ஒரு மாதத் தேவையில் சுமார் 15 சதவீதத்தையே பூர்த்தி செய்து வருகிறது. எனவே, சேமிப்பு திறனை உயர்த்துவது மிகவும் முக்கியம் என விவசாயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இர் இஸ்ஹாம் ஹாசிம் தெரிவிதத்தார்.
“இது, உணவுக் தட்டுப்பாட்டை குறிப்பாக வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டப் போது சமாளிக்க உருவாக்கப்பட்ட அவசரத் திட்டம் ஆகும். அதே நேரத்தில், இதுபோன்ற சூழ்நிலைகளில் விலை நிலைத்தன்மையைப் பேணவும் கிடங்கு உதவும்.
“ஏழு மில்லியன் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு மூன்று மாதத்திற்கான சேமிப்பாக உணவு கிடங்கின் திறனை உயர்த்த உள்ளோம்,” என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதத்தில், நெருக்கடி நேரங்களில் அடிப்படை உணவுப் பொருட்களின் விலை நிலைத்தன்மையை உறுதி செய்யவும், வழங்கல் சங்கிலி பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஒரு முயற்சியாக உணவு கிடங்கை மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிமுகப்படுத்தியிருந்தார்.




