ஜார்ஜ்டவுன், நவம்பர் 19 - பினாங்கு மற்றும் மலேசியா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான வலுவான அடித்தளமாக, நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை பினாங்கில் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை பாகான் டாலாம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் மாநில சட்டமன்ற அமர்வில் முன்வைத்தார்.
பினாங்கில் தற்போது செயல்பட்டு வரும் 28 தமிழ் தொடக்கப் பள்ளிகள், மாநிலத்தில் தமிழ் கல்வி வலுவாக நிலை பெற்றிருப்பதைக் காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல தமிழ் மாணவர்கள் தொடக்கக் கல்வியை முடித்து இடைநிலைப் பள்ளிகளுக்குத் தொடர்கின்றனர். இந்நிலையில், புதிய கல்வி முறை மாற்றங்களும் மொழி வேறு பாடுகளும் காரணமாக, குறிப்பாக மலாய் மொழி, அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் மாணவர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர். இதனால் பி 40 குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு படிப்பை விடும் அபாயமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையைக் கருத்தில் கொண்ட குமரன் கிருஷ்ணன், தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பது வெறும் விருப்பமல்ல, மாறாக தமிழ் மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்பு மற்றும் வலுவான கல்விச் சூழலை உறுதி செய்யும் அடிப்படைத் தேவை என அவர் வலியுறுத்தினார்.
இதற்காக கல்வி அமைச்சின் அனுமதியை பெறும் வகையில், மாநில அரசு அதிகாரப்பூர்வமான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.
தமிழ் இடைநிலைப்பள்ளி நிறுவும் முயற்சி முன்னேறினால், மலேசியாவில் உருவாகும் முதலாவதாகவும் அந்த வரலாற்றுப் பள்ளிக்கான முன்னோடி திட்டத்திற்குப் பாகான் டாலாமில் நிலம் ஒதுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
பினாங்கில் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்க கோரிக்கை- குமரன் கிருஷ்ணன்
19 நவம்பர் 2025, 4:42 AM




