ஷா ஆலாம், நவ 18- சிலாங்கூர் மாநிலம் அதன் துணை நிறுவனங்களின் ஈவுத்தொகை, முதலீடுகள் மற்றும் நீர் வரிக்கட்டணங்கள் மூலம் ஆண்டுக்கு பல மில்லியன் ரிங்கிட் வருவாயைப் பதிவு செய்வதன் மூலம் தனது நிதி நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
அதோடு, பூஜ்ய வெளியேற்றக் கொள்கை மற்றும் இருண்ட இழைத் திட்டங்கள் போன்ற புதிய வருவாய்த் திட்டங்கள் மாநிலத்தின் வருமானத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு முதல் துணை நிறுவனங்களின் ஈவுத்தொகைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் RM40 மில்லியன் ஈட்டப்பட்டு, அது சிலாங்கூர் மாநில அரசு முகமைகள் மற்றும் துணை நிறுவனங்கள் பங்களிப்பு அறக்கட்டளை நிதி மூலம் செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர் கச்சா நீர் எடுக்கும் கட்டணம் மூலம் இந்த ஆண்டு RM35 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இது RM70 மில்லியன் இலக்கில் பாதியளவை எட்டியுள்ளதாகவும் அறிவித்தார்.
இன்று மாநிலச் சட்டமன்றத்தில் (DNS) உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமிருடின் ஷாரி இவ்வாறு கூறினார். மாநில அரசின் வருவாய் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து அவர் விவரித்தார்.
"பூஜ்ய வெளியேற்றக் கொள்கை (ZDP) இன்னும் வரைவு நிலையிலேயே உள்ளது. ஆனால், அது நடைமுறைக்கு வந்த பிறகு, அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் RM50 மில்லியன் உட்பட RM100 மில்லியன் வரை பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.
மேலும், RM10 மில்லியன் கடனுதவி மூலம் செயல்படுத்தப்பட்ட மினி ஹைட்ரோ திட்டமானது கடந்த ஆண்டு RM300,000-ம், இந்த ஆண்டு RM500,000-ம் வருமானம் ஈட்டியுள்ளது.
அதே சமயம், பூலாவ் இண்டா மின் உற்பத்தி நிலையம் (Pulau Indah Power Plant - PIPP), RM150 மில்லியன் கடனில் இருந்து 13.1 சதவீத ஈவுத்தொகையுடன் RM20 மில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளது என்றும் அவர் விளக்கினார்.
அடுத்த ஆண்டு, சிலாங்கூரில் தரவு மையங்களின் செயல்பாடுகளை ஆதரிக்கவும், இணைய இணைப்பின் திறனை அதிகரிக்கவும் மாநில அரசு இருண்ட இழைத் (Dark Fibre) முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




