ஷா ஆலாம், நவ 18- ஒவ்வொரு வருடமும் சிலாங்கூர் மாநிலத்தில் கொண்டாடப்படும் பெருநாள்களுக்கு சிலாங்கூர் மாநில அரசின் சார்பாக ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.
இது மாநில மக்களுக்கு குறிப்பாக வசதி குறைந்த மக்களின் சுமையைக் குறைக்கவும் பெருநாள்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் இது உதவுவதாக சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
2026ஆம் ஆண்டில் சுமார் 2 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்கு வழங்கப்பட்டிருப்பது என்பது மிகப்பெரிய தொகையாகும்.
இதனால் அதிகமான பி40 குடும்பங்கள் பயனடைந்து மகிழ்ச்சியாக தங்களின் பெருநாள்களைக் கொண்டாடுவார்கள். தனது கோரிக்கைக்குச் செவி சாய்த்து நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்வதாக பாப்பாராய்டு சொன்னார்.
2025 சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டத்தில் ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்காக மாநில அரசு 16.48 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கிய நிலையில் 2026ஆம் ஆண்டில் கூடுதலாக 2 மில்லியன் ரிங்கிட் அதிகரிக்கப்பட்டு 18.48 மில்லியனாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




