ad

63.99 பில்லியன் ரிங்கிட்டை முதலீட்டு வருமானமாக ஊழியர் சேமநிதி வாரியம் பதிவு

17 நவம்பர் 2025, 8:35 AM
63.99 பில்லியன் ரிங்கிட்டை முதலீட்டு வருமானமாக ஊழியர் சேமநிதி வாரியம் பதிவு

கோலாலம்பூர், நவ 17 - இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் திகதி வரை 63.99 பில்லியன் ரிங்கிட்டை மொத்த முதலீட்டு வருமானமாக ஊழியர் சேமநிதி வாரியம் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 57.57 பில்லியன் ரிங்கிட்டைக் காட்டிலும் இது 11 விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு மூன்றாம் காலாண்டில் 19.67 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியிருந்த மொத்த முதலீட்டு வருமானம், இவ்வாண்டு அதே காலாண்டில் 25.07 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகி 27 விழுக்காட்டு உயர்வை எட்டியிருப்பதாக அவ்வாரியம் தெரிவித்தது.

மூன்றாம் காலாண்டில், குறிப்பாக பங்குச் சந்தைகள் மொத்த முதலீட்டு வருமானத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அதாவது 68 விழுக்காட்டை வழங்கி இருப்பதாக ஊழியர் நிதி சேமநிதி வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், நிலையான மூலதன வருமானத்தை உட்படுத்தி அந்த காலாண்டிற்கான மொத்த முதலீட்டு வருமானத்தில் 27 விழுக்காட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதுடன் வீடு, மனை விற்பனை மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை நான்கு விழுக்காடாகப் பதிவாகியுள்ளன.

இதைத் தவிர்த்து எஞ்சிய ஒரு விழுக்காட்டிற்கு பணச் சந்தை கருவிகள் பங்களித்துள்ளதாக அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, மூன்றாம் காலாண்டிற்கான மொத்த முதலீட்டு வருமானத்தில் வழக்கமான சேமிப்புக்காக 20.48 பில்லியன் ரிங்கிட்டும், ஷரியா சேமிப்புக்காக 4.59 பில்லியன் ரிங்கிட்டும் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.