கோலாலம்பூர், நவ 17 - நேற்று தொடங்கி நாட்டின் புதிய அவசர அழைப்பான, NG999 அமல்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் AppStore அல்லது Google Play-இலிருந்து, SaveME999 செயலியைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இச்சேவை அவசர தகவல்களைத் துல்லியமாக, வேகமாக, மற்றும் ஆக்கப்பூர்வமாக அனுப்புவதை எளிதாக்க உருவாக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அவசர அழைப்பு மையம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் தகவல்கள் மற்றும் தரவு பரிமாற்றத்தை அதிகரிப்பதோடு, அவசர சேவையின் ஆற்றலை மேம்படுத்தும், ஒருங்கிணைந்த வியூக இலக்கவியல் சேவையே NG999 ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும், ஆற்றல்மிக்க அவசர சம்பவ நிர்வகிப்பிற்கு, அகப்பக்கம், அழைப்பாளர் ID, புவிஇருப்பிட சேவை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றம் திறன்பேசி செயலி போன்றவை இந்த புதிய சேவை ஒன்றிணைப்பதாக முன்னதாக தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்திருந்தார்.
அதேவேளையில், நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட இடங்களுக்கு NG999 சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய MERS999-இன் கீழ் இருந்த இடங்களின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகமாகும் என்றும் அவர் விளக்கினார்.
--பெர்னாமா




