அலோர் ஸ்டார், நவம்பர் 13 — நேற்று லங்காவியில் நண்பர்களுடன் மீன் பிடித்து வீட்டுக்கு திரும்பும் வழியில் மின்னல் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்.
கம்போங் பெர்ஜாயா, லங்காவியைச் சேர்ந்த ஈஷாக் ஹாஷிம் (57) என அடையாளம் காணப்பட்ட அந்த ஆடவர் லங்காவி சுல்தானா மலிஹா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்தார் என லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி கைருல் அஸ்ஹார் நூருதின் தெரிவித்தார்.
“படகு உரிமையாளரான அவ்வாடவர் காலை 8 மணியளவில் தனது மூன்று நண்பர்களுடன் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றார். மாலை 7.20 மணியளவில் அவர்கள் மீன் பிடித்து திரும்பியபோது மழை பெய்து கொண்டிருந்ததால் துறைமுகத்தின் கூரையின் கீழ் தங்கினர். அந்த நேரத்தில், மீன்பிடி கம்பியை எடுக்கச் சென்றபோது மின்னல் தாக்கி அவர் துறைமுகத்தின் கீழே விழுந்தார்.
அங்கிருந்த பொதுமக்கள் உடனே உதவி செய்து அவரை மீண்டும் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்த அவர் இரவு 8.35 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.




