ஷா ஆலம், நவம்பர் 13 – பி40 வருமானக் குழுவைச் சேர்ந்த மேலும் பலர், சிலாங்கூர் 2026 பட்ஜெட்டின் மூலம் வழங்கப்படும் RM200 மதிப்பிலான ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பற்றுச்சீட்டு பெருநாள் காலத்தில் உள்ள செலவைக் குறைப்பதற்காக. ஆனால் வறுமையற்ற மாநிலம் என்ற மாநிலத்தின் இலக்கை அடையவும் ஒரு முயற்சி ஆகும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கூறினார். அத்துடன், தேசிய வகை தமிழ் பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டண உதவி திட்டம் தொடருமாறும் தக்க ஒதுக்கீடு வழங்கப்படுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் பேருந்து கட்டணத்தைக் குறைக்க RM300 வரை உதவி பெற முடியும்,” என்றார். இந்த ஆண்டு பட்ஜெட்டின் கீழ், RM12 மில்லியன் ஒதுக்கப்பட்டு, ஏழை குடும்பங்கள் ஹரிராயா, சீன புத்தாண்டு மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளை கொண்டாடுவதற்காக ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.
கடந்த வாரம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, தனது முகநூல் பதிவில், வரும் ஆண்டுக்கான செலவுத்திட்டம் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், அது மக்களுக்கு நேரடி பலன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் 2026 பட்ஜெட் கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு அடிப்படையிலான புதிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, மக்கள் மாநில வளர்ச்சியுடன் இணைந்து முன்னேறுவதை உறுதி செய்யும் என்றார் அவர்.




