கோலாலம்பூர், நவ 12 - தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான அமைதி ஒப்பந்தம் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பது அந்த ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த மலேசியா மத்தியஸ்தராகச் செயல்பட்டதால் ஏற்பட்டது அல்ல.
மாறாக, கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்தின் அனைத்து விவரங்களையும் கம்போடியா முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தாய்லாந்து அதன் அமலாக்கத்தை ஒத்திவைத்ததாகும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கமளித்தார்.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் அமைதியாகவும் நெறிப்படுத்தப்பட்ட முறையிலும் தொடர்வதை உறுதி செய்ய மலேசியா ஒருங்கிணைப்பாளராகத் தனது பங்கை ஆற்றுவதில் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளதாகவும் டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
"நான் (தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல்) அவர்களைத் தொடர்பு கொண்டுவிட்டேன்," என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சமாதான பேச்சுவார்த்தையின் திசை மற்றும் செயல்பாட்டை நிர்ணயிக்கும் மறைமுகமான கையாக மலேசியா செயல்பட்டது என்று தாய்லாந்து முன்னாள் மேஜர் ஜெனரல் ரங்ஸி கிடியான்சாப் கூறியதைத் தொடர்ந்து அந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டையும் பிரதமர் மறுத்தார்.
சமீபத்தில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு நிலைமையைக் கண்காணிக்கவும் எல்லைப் பகுதியில் நிலைத்தன்மையைப் பேண உதவவும் தாய்லாந்து மற்றும் கம்போடியா அரசாங்கங்களுடன் மலேசியா நேரடி தொடர்பில் இருப்பதாகவும் பிரதமர் விவரித்தார்.
-- பெர்னாமா




