ஷா ஆலம், நவ 7 — செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் கிடையாது என சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானதுடன், பிற சாலைப் பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஜேபிஜே அமலாக்க மூத்த இயக்குநர் டத்தோ முகமட் கிஃப்லி மா ஹாசன் கூறினார்.
இதுவரை 9,114 அபராத நோட்டீஸ்களை ஓட்டுநர்கள் மற்றும் நிறுவனர் உரிமையாளர்களுக்கு ஜேபிஜே வழங்கியுள்ளது. இவை செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் தொழில்வகை உரிமம் (GDL) இல்லாத குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மீறலுக்காக வழங்கப்பட்டவை ஆகும்.
“மேலும், விசாரணை நோட்டீஸ் வழங்குதல், வாகன பரிசோதனை உத்தரவு மற்றும் சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 கீழ் பறிமுதல் உள்ளிட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று அவர் முகநூல் வழியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சு உள்ளிட்ட பிற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, செல்லுபடியாகும் உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையை முழுமையாக ஒழிக்க தொடர்ச்சியான கண்காணிப்பை ஜேபிஜே மேற்கொள்ளும்.




