ஷா ஆலம், 23 பிப்: கடந்த சனிக்கிழமை ரவாங்கில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சாலைப் போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை குண்டாங் காவல் நிலையத்தில் இந்தப் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிருக்கோ அல்லது சொத்துக்களுக்கோ ஆபத்தை விளைவிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதற்காக, 1957-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் பிரிவு 6-இன் கீழ் இந்த வழக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது குறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவுச்சாலையில் (LATAR) சீனப் புத்தாண்டுக்கான சிறப்புச் சோதனை நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்திச் சோதனையிட்டபோது, அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் சாலை வரி காலாவதியானது போன்ற பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
அவர்களுக்குச் அபராதம் விதித்த தருணத்தில், அருகிலிருந்த குன்றின் மேலிருந்து சுமார் 20 முதல் 30 பேர் கொண்ட மோட்டார் சைக்கிள் கும்பல் அதிகாரிகள் மீது பலமுறை பட்டாசுகளை வீசியதாகச் சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அமலாக்க அதிகாரிகள் மற்றும் பிற சாலைப் பயனாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகையச் செயல்களைத் விட முடியாது என்று சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை இயக்குனர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் சாலை விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.








