கோலாலம்பூர், நவ 6 - மலேசியா-அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (ART) மூலம் நாட்டின் டிஜிட்டல் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் கடுமையாக நிராகரித்துள்ளார்.
கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர், சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் கவனமாகப் படிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.யான அஹ்மத் ஃபட்லி ஷாரிக்கு (PN–Pasir Mas) வலியுறுத்தினார்.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் மலேசியாவின் டிஜிட்டல் இறையாண்மையைப் பாதித்து, நாட்டை "சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களின் அல்காரிதம் ஆய்வுக் கூடமாக" மாற்றுமா என்று ஃபத்லி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த கோபிந்த், "உடன்படிக்கை என்பது பேச்சுவார்த்தை அல்ல. இது ஒரு எளிய வார்த்தை. இவ்வளவு எளிமையான கருத்தை உங்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரியவில்லை" என்று சாடினார்.
மேலும், இந்த ஆவணத்தை அமைச்சரவை பலமுறை விவாதித்து, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்துள்ளது என்றும், இது நமது இறையாண்மையைக் கட்டுப்படுத்துகிறது அல்லது யாரிடமும் ஒப்படைக்கிறது என்று ஒப்பந்தத்தின் விதிமுறைகள் தெளிவாகக் கூறவில்லை என்றும் கோபிந்த் வலியுறுத்தினார்.




