ஷா ஆலாம், நவ 6 - மலேசியாவில் மொத்தமாக நிலுவையில் உள்ள 5.5 மில்லியனுக்கும் அதிகமான போக்குவரத்து அபராதங்களுக்கு, 50 விழுக்காடு (50%) தள்ளுபடி சலுகையை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் நிலுவையில் உள்ள அபராதங்களை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்துவதற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை நவம்பர் 1ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. டிசம்பர் 30-க்குப் பிறகு, ஜனவரி 1, 2026 முதல், அபராதம் செலுத்தும் விகிதங்கள் சீரமைக்கப்படும் என்றும், அபராதங்களைச் செலுத்தாதவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் கறுப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஜனவரி 1, 2026-க்குப் பிறகும் அபராதங்கள் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களின் வாகன உரிமம் (LKM) மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்; இதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமங்களைப் புதுப்பிக்க முடியாது.
இந்த நடவடிக்கை MySikap அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள அபராதங்களில், JPJ (P) 22 அறிவிப்பு அதிகபட்சமாக 3,685,164 எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.






