இஸ்தான்புல், நவம்பர் 5 — கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் RM12.86 பில்லியன் மோசடி வழக்குகளில் இழந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அரசு புதிய குற்றச் சட்டத்தின் கீழ் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கட்டாய தண்டனையாக பிரம்படி தண்டனை விதிக்க இருப்பதாக செவ்வாய்க்கிழமை அங்கீகரிக்கப்பட்ட சட்டம் தெரிவிக்கிறது.
மோசடி கும்பலை நடத்துவதோ, அதற்கு உதவுவதோ என குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் குறைந்தது ஆறு பிரம்படிகள் தண்டனையாக பெறுவார்கள். இதனுடன் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அனடோலு ஏஜென்சியின் தகவல் கூறியுள்ளது . குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து அதிகபட்சம் 24 அடிகள் வரை தண்டனை வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் கீழ், மோசடி கும்பல் உறுப்பினர்கள், ஆட்களை சேர்ப்பவர்கள், மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள், வங்கிக் கணக்கு, SIM கார்டு, அல்லது டிஜிட்டல் அடையாளம் வழங்கும் “மணி மியூல்கள்” உட்பட அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
2019 முதல் சிங்கப்பூர் அரசு RM10.93 பில்லியன் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்கள் RM3.54 பில்லியன் இழந்துள்ளனர்.
மேலும் இந்த மசோதாவில் சில திருத்தங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் பாலியல் குற்றங்கள், பலவீனமான நபர்களை கொடூரமாக தாக்குதல், அரசு பணியாளர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல், மற்றும் அவதூறான பொருட்களை பகிர்தல் ஆகியவற்றுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
10 பேருக்கு மேல் அவதூறான உள்ளடக்கத்தைப் பகிர்ந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் குற்றவாளி 18 வயதிற்குக் குறைவாக இருந்தால் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பாலியல் குற்றத்தில், 14 வயதிற்குக் குறைவானவர்களை இலக்காகக் கொண்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள், 14 முதல் 17 வயது வரை உள்ளவர்களை இலக்காகக் கொண்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
மேலும், புதிய சட்டத்தின் கீழ் சிங்கப்பூரின் அதிகாரம் வெளிநாட்டில் நிகழும் குற்றங்களுக்கும் விரிவடைகிறது. பலவீனமான நபரை உயிரிழக்கும் வரை துன்புறுத்தும் குற்றத்திற்கான சிறைத் தண்டனை 20 ஆண்டுகளிலிருந்து 30 ஆண்டுகள் அல்லது ஆயுள் சிறை வரை உயர்த்தப்பட்டுள்ளது.




