கோலாலம்பூர், நவ 4 - மலேசியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (ஏ.ஆர்.தி) கூட்டரசு அரசியலமைப்பின் உணர்வுக்கோ அல்லது அதில் இடம்பெற்றுள்ள ஒதுக்கீட்டிற்கோ முரண்பாடான எந்தவொரு அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை.
மேலும், ஏ.ஆர்.தி உட்பட நாட்டின் எந்தவொரு ஒப்பந்தமும் மலேசிய சட்டங்களுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்யும் முக்கிய பங்கு தேசிய சட்டத்துறைக்கு உள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி நேரத்தின்போது, அந்த பரஸ்பர ஒப்பந்ததிற்கு தேசிய சட்டத்துறையின் விளக்கம் பெறப்பட்டதா என்று கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தகியுட்டின் ஹசான் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மலேசியாவும் அமெரிக்காவும் இந்த ஏ.ஆர்.தியின் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம் இவ்வாண்டு ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவு 14257-இன் கீழ் மலேசியா மீதான வரி விதிப்பை 25 விழுக்காட்டிலிருந்து 19ஆக குறைப்பது குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்துவதற்கான அமெரிக்காவின் பரிந்துரையாகும்.
--பெர்னாமா




