கோலாலம்பூர், நவ 3- சாலைப் போக்குவரத்து துறை (JPJ KL), கடந்த அக்டோபர் 14 முதல் தொடங்கப்பட்ட 'அதிகச் சுமைக்கு எதிரான போர்' (Ops Perang Lebih Muatan) நடவடிக்கையின் மூலம், நகரைச் சுற்றியுள்ள 939 வாகனங்களுக்கு எதிராக மொத்தம் 2,398 சம்மன்களை வழங்கியுள்ளது.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், சரக்கு வாகன உரிமையாளர்கள் சட்டத்தைக் கடைப் பிடிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, 2025 டிசம்பர் 31 வரை தொடரும்.
இந்த நடவடிக்கையில், குறிப்பாக கல், மணல், விறகு போன்ற ஆபத்து நிறைந்த அதிகச் சுமைகளைக் கொண்டு செல்லும் குவாரி, துறைமுகம் மற்றும் கனரகத் தொழில்துறை வாகனங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.
சம்மன்களைத் தவிர, 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் காலாவதியான வாகன உரிமம், காப்பீடு இல்லாமை, ஓட்டுநர் உரிமம் (CDL/Vokasional) இல்லாமை மற்றும் அதிகச் சுமை உட்படப் பல கடுமையான மீறல்கள் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஆறு வெளிநாட்டு ஓட்டுநர்கள் (இந்தோனேசியா, இந்தியா) மற்றும் எட்டு உள்ளூர் ஓட்டுநர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதுவரை, 5,967 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்கள் ஒத்துழைக்க மறுப்பது, எடை போடுவதைத் தவிர்ப்பது போன்ற சவால்களை ஜே.பி.ஜே எதிர்கொண்ட போதிலும், பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அலட்சியமான தரப்பினருடன் சமரசம் செய்யப்போவதில்லை என்று ஜே.பி.ஜே உறுதியளித்தது.
அமலாக்க அதிகாரிகளின் கடமையைத் தடுப்பது, APAD 2010 சட்டத்தின் 234 பிரிவின் கீழ் RM200,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு வழிவகுக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.




