ஷா ஆலம், அக் 31 — வெள்ள அபாயத்தை குறைக்கும் நோக்கில், முக்கிய பகுதிகளில் ஷா ஆலம் மாநகராட்சி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது என்று மேயர் டத்தோ முகமட் ஃபௌஸி முகமட் யாத்திம் தெரிவித்தார்.
“நாங்கள் ஆறு முக்கிய இடங்களில் வெள்ளக் தடுப்புகளை அமைத்ததுடன் தற்காலிக நீர் சேமிப்பு குளங்களையும் உருவாக்கியுள்ளோம்,” என்று அவர் நேற்று விஸ்மா எம்பிஎஸ்ஏவில் நடைபெற்ற முழு மன்றக் கூட்டத்திற்குப் பின் தெரிவித்தார்.
ஜாலான் செம்பூரான் 25/81, ஜாலான் சப்போத்தான் 3/11, செக்ஷன் 32இல் உள்ள கெமுனிங் கிரீன்ஹில் மற்றும் AMJ தொழிற்பேட்டையில் உள்ள ஜாலான் தெலுக் பாத்து ஆகிய இடங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள் நிறைவுபெற்றன என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, புக்கிட் ரிமாவிலுள்ள தாமான் புக்கிட் கெமுனிங் மற்றும் தாமான் கிரீன்ஹில் 3 பகுதிகளில் உள்ள திட்டங்கள் இன்னும் திட்டமிடும் கட்டத்தில் உள்ளன. கட்டுமானப் பணிகள் நவம்பர் மாத மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தாமான் பூங்கா ராயா (செக்ஷன் 30) பகுதியில் ஜாலான் ஹாஜி பாக்ரி சாலையிலும், தாமான் ஆலம் இண்டாவில் (செக்ஷன் 33) உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன என்று ஃபௌஸி தெரிவித்தார்.
எம்பிஎஸ்ஏ தனது ஒப்பந்தக்காரர்களை வடிகால்கள் மற்றும் நீர் சேமிப்பு குளங்களை சுத்தம் செய்வதை உட்பட பராமரிப்பு பணிகளை வலுப்படுத்த உத்தரவிட்டுள்ளது.




