ஷா ஆலம், அக் 22 – இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சிலாங்கூரில் உள்ள சில ஆறுகள் ஆபத்தான மட்டத்தை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) வெளியிட்ட தரவுகளின்படி, சபாக் பெர்ணம் மாவட்டத்தின் ரிம்பா KDR பகுதியில் அமைந்துள்ள பெர்ணம் ஆறு, காலை 7.30 மணிக்கு 2.52 மீட்டர் உயரம் வரை சென்றுள்ளது. இது ஆபத்தான நிலையான 2.3 மீட்டரை விட அதிகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில், கிள்ளான் ஆறும் 3.37 மீட்டர் அளவில் பதிவாகி உள்ளது. இது ஆபத்து நிலையான 3.0 மீட்டரை விட 0.37 மீட்டர் அதிகம் மேலும் உயரும் போக்கில் உள்ளது.
உலூ லாங்காட் பகுதியில், பத்து பன்னிரெண்டு (Batu 12) பகுதியில் உள்ள லாங்காட் ஆறு 41.83 மீட்டர் வரை உயர்ந்துள்ளது, இது எச்சரிக்கை நிலையான 41.4 மீட்டரை மீறி, உயர்வு போக்கைக் காட்டுகிறது.
இதனிடையே, மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசிய இன்று காலை 9 மணி வரை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோலா லாங்காட் மற்றும் சிப்பாங் உள்ளிட்ட சிலாங்கூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என்று கணித்துள்ளது.
பொதுமக்கள் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை முன்னிட்டு எச்சரிக்கையுடன் இருக்கவும், அவசர கால இடம்பெயர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


