ஷா ஆலம், அக் 21: இந்தியர் மற்றும் பூர்வீக குடி மக்களின் சமூகத்தினருக்கான கல்வி மற்றும் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கல்வி மிக முக்கியமானது என்பதால் மாணவர்கள் கல்வியில் பின்தங்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
ஆகவே கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டால், குறிப்பாக இந்தியர் மற்றும் பூர்வீக குடி மக்களின் மாணவர்கள் தங்களது கல்வியை உயர்கல்வி நிலைகள் வரை தொடர உதவியாக இருக்கும் என்றார் அவர்.
மேலும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ' அமிருடின் ஷாரி கல்வி மற்றும் மக்களின் நலனில் காட்டும் அர்ப்பணிப்பிற்காக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். அதே சமயம், குறைந்த வருமானக் குழுவினருக்கு உதவுவதற்காக செஜாத்ரா மடாணி திட்டத்தின் மூலம் மாநில அரசு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது என்றார் அவர்
சிலாங்கூர் மாநில பட்ஜெட் 2026 நவம்பர் 14 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.