ஷா ஆலாம்: அக் 8 - மக்களின் குரலுக்கு பக்கபலமாக மாநில அரசு விளங்குவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு கூறினார்
இன்று அவர் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 இந்திய சமூக தலைவர்களுடன் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு சந்திப்பு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, அடிமட்ட அளவில் இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குறைகள் மற்றும் தற்போதைய நிலவரங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களை நேரடியாக கேட்டறிந்தார்.
இந்திய சமூகத்தின் ஒவ்வொரு குரலும் செவிமடுக்க பட்டு, உரிய கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானது. இது, சிலாங்கூர் மாநில அரசின் கொள்கைகளையும், நலத்திட்டங்களையும் வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த மக்களின் பொதுவான நலனை நோக்கிய எங்கள் இலக்கை வலுப்படுத்தவும் உதவும் என்றார்.
மக்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படத் தொடர்ந்து கடமைப்பட்டுள்ள அனைத்து இந்திய சமூகத் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
திட்டமிடப்பட்டுள்ள ஒவ்வொரு நலத்திட்டமும் மேம்பாட்டுச் செயல்திட்டமும் குறிப்பாகச் சிலாங்கூர் இந்தியச் சமூகத்திற்கு உண்மையான பலனை அளிப்பதை உறுதிசெய்ய, இந்த நெருங்கிய ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.