கோத்தா கெமுனிங், அக் 3 – புதிய வீட்டு திட்டத்திற்கான சாவி ஒப்படைப்பு விழா ஷா ஆலாம், பிரிவு 32, புக்கிட் கெமுனிங், பத்து 8, லாட் 1325-இல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அவர்கள், சிலாங்கூர் மாநில மேம்பாட்டு இயக்குநர் டத்தோ ஹாஜி மொஹ்த் கிதிர் பின் மாஜித், ஷா ஆலம் நகர மன்றம் எம்.பி.எஸ்.ஏ. மண்டலம் 14 கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் மற்றும் வீடு உரிமையாளர் திரு மகாமுனி மலையாளம் குடும்பத்தினர் ஆகியோர் இணைந்து சிறப்பித்தனர்.
இந்த வீட்டுத் திட்டம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல தரப்பினரின் ஒத்துழைப்பில் உருவானது. அமலாக்க ஒருங்கிணைப்பு அலகு எனப்படும் (ICU) RM 80,000, கோத்தா கெமுனிங் தொகுதி RM 15,000, மண்டலம் 14 அலுவலகம் மற்றும் தனியார் நன்கொடையாளர்களின் பங்களிப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த முயற்சியால், பெறுநர் மற்றும் அவரது குடும்பம் வசிக்க ஒரு பாதுகாப்பான, வசதியான புதிய வீடு அமைக்கப்பட்டது.
வீடு ஒரு ஆடம்பரம் அல்ல, மாறாக அது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என வலியுறுத்தினார் பிரகாஷ் சம்புநாதன். வீடு என்பது சுவர்கள் மற்றும் கூரை மட்டுமல்ல அது பாதுகாப்பாக வாழும் இடம், குடும்பம் உருவாகும் தளம், எதிர்காலத்திற்கான நம்பிக்கை விதைக்கும் தளம். எல்லா மக்களுக்கும் சொந்த வீட்டுக்கு உரிமையாளராக இருக்க வேண்டும், சிலரால் மட்டும் அடையக்கூடிய ஆடம்பரமாக இருக்க கூடாது, என வலியுறுத்தினார் பிரகாஷ் சம்புநாதன்.
இன்று, மத்திய மாநில அரசுகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மற்றும் சமூக மன்றம் இணைந்து உயிர் கொடுத்துள்ள இத்திட்டம் வெறும் காற்றோடு செல்லும் வாக்குறுதியாக விடாமல் அதை நிஜமாக்க அனைவரும் பாடு பட்டிருக்கிறோம் என்றார்.
மேலும், இந்த மத்திய மாநில அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதற்கான சான்றாகும் என்றார். அரசு அக்கறை கொண்டது என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேட்கிறோம், ஆனால் இந்த அரசு அக்கறை மட்டுமல்லாமல் செயல் திறன் மிக்கது என்பதற்கு மேலும் ஒரு ஆதாரம் என்பதை காண்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், எம்.பி.எஸ்.ஏ. மண்டலம் 14 கவுன்சிலர் யோகேஸ்வரியின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை பாராட்டினார். யோகேஸ்வரி ஒரு உண்மையான தலைவரின் எடுத்துக்காட்டு. மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் அவர் காட்டும் உழைப்பு, அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணம். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அவரது பங்களிப்பை நான் பாராட்டுகிறேன் என்றார் அவர்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்த வீட்டை கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. பிறகு இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டு இந்த பணி செப்டம்பர் 30 அன்று முடிவு பெற்றது. இன்று அதிகாரப்பூர்வமாக வீட்டு சாவி வழங்க்கப்பட்டது. இந்த முயற்சியின் பலனாக, பெறுநர் திரு மகாமுணி, தனது குடும்பத்துடன் பாதுகாப்பான, வசதியான வாழ்க்கையை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளதாக அவர் யோகேஸ்வரி கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசிப்பதாகவும் பல முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் திரு மகாமுணி கூறினார். இந்த ICU திட்டத்தின் வழி வீடு கட்டப்பட்டதில் தாம் பெறும் மகிழ்ச்சி அடைவதாகவும் மடாணி அரசாங்கத்துக்கும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழா ஒரு வீட்டின் சாவி ஒப்படைப்பு மட்டுமல்ல, மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக தகுந்த வீடமைப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் சமூக நீதியின் செய்தியையும் வலியுறுத்தியது.