ஜோகூர், செப் 19 - எதிர்வரும் செப்டம்பர் 22 முதல், சிங்கப்பூரியர்கள் கடப்பிதழ் இல்லாமல் QR குறியீட்டை மட்டுமே பயன்படுத்தி ஜோகூர் பாருவில் குடிநுழைவுச் சோதனையை கடக்க முடியும்.
இது மலேசியாவின் புதிய தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறையான MyNliSe (pronounced my nice") சோதனை திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது 2026 பிப்ரவரி வரை ஜோகூர் பாருவின் இரு நிலச் சாவடிகளில் நடைபெறும்.
இந்த காலக்கட்டத்தில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையங்கள் 1 மற்றும் 2, பினாங்கு, கூச்சிங் மற்றும் கோத்தா கினாபாலு உள்ளிட்ட மலேசியாவின் ஐந்து விமான நிலையங்களுக்கும் இந்த அமைப்பு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
MyNliSe பயன்பாடு, குழுக்களாப் பயணிக்கும் பயணிகள் ஒரே QR குறியீட்டின் மூலம் குடிநுழைவுச் சோதனையை எளிதாக கடக்க உதவுகிறது.
இது தற்போது பயன்படுத்தப்படும் MyBorderPassயை விட மேம்பட்டதாகும். மேலும், எதிர்கால ஜோகூர் பாரு-சிங்கப்பூர் RTS இணைப்புத் திட்டத்திலும் இது பயன்படுத்தப்படும்.
தற்போது, ஜோகூர் பாருவில் 27 முகப்புகளும், இரண்டாவது ஜோகூர் பாலத்தில் 24 முகப்புகளிலும் MyNIISe பொருத்தப்பட்டுள்ளன.