ஷா ஆலம், செப். 18: ஜூலை மாதம் வரை, சிலாங்கூரில் மொத்தம் 337,851 குடும்பங்கள் ஆயர் டாருல் எஹ்சான் (SADE) திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் இலவச நீர் சலுகைகளைப் பெற்றனர்.
இத்திட்டத்திற்கு தனது தரப்பு 500,000 பயனாளிகள் 20 கன மீட்டர் இலவச நீரைப் பெற தகுதியுடையவர்களாக இருக்க இலக்கு வைத்துள்ளதாக பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் துணை சுகாதார அதிகாரி ஆடம் சஃபியன் கசாலி தெரிவித்தார்.
“இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பெறுநர்களின் எண்ணிக்கை 337,851 குடும்பங்கள். எதிர்காலத்தில் இந்த பலனை பெற தகுதியுடையவர்களாக இருக்க அதிக பயனர்களை ஆயர் சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளது.
“அதிகாரப்பூர்வ வலைத்தளம், டிஜிட்டல் தளங்களில் விளம்பரப்படுத்துவது மற்றும் மக்கள் பராமரிப்பு அமைப்பு (Smart Initiatives for the Care of the People System (SSIPR) மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு வழங்குவது உட்பட, இந்த திட்டத்தை நாங்கள் தொடர்ந்து விளம்பரப்படுத்துவோம் என்றார் கசாலி.

"சமூக ஊடகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு வழிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஆயர் சிலாங்கூர் நடத்தி வருகிறது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
ஆகஸ்ட் 1 முதல், SADE விண்ணப்பங்களுக்கான வீட்டு வருமான வரம்பு மாதத்திற்கு RM5,000 இலிருந்து RM6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இலவச சுத்தமான நீர் விநியோகத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்க மாநில அரசு RM30 மில்லியனுக்கும் அதிகமான செலவை ஏற்றுக்கொண்டது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் www.airselangor.com/services/sade என்ற அதிகாரப்பூர்வ ஆயர் சிலாங்கூர் வலைத்தளத்தை நாடவும்.