கோலாலம்பூர், செப். 18 - சபாவில் வெள்ள நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இன்று காலை தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.
நேற்றிரவு 814 குடும்பங்களைச் சேர்ந்த 2,919 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 916 குடும்பங்களைச் சேர்ந்த 3,134 பேராக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் பியூஃபோர்ட், மெம்பாகுட், பெனாம்பாங், பாப்பார், புத்தாத்தான் மற்றும் சிபித்தாங் ஆகிய ஆறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள 27 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிபித்தாங் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பியூஃபோர்ட், பாப்பார் மற்றும் புத்தாத்தானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. பெனாம்பாங் மற்றும் மெம்பாகுட்டில் வெள்ளம் தணியும் காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 9 முதல் சபாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் மொத்தம் 127 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாவில் காலையிலும் மாலையிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே நேரத்தில் மாலையில் உட்புறத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபாவில் வெள்ளம் மோசமடைகிறது - 27 நிவாரண மையங்களில் 3,000 பேர் அடைக்கலம்
18 செப்டெம்பர் 2025, 8:28 AM