கோத்தா கினபாலு, செப். 17 - கெனிங்காவ் கிராமத்தில் நேற்றிரவு பணியில் ஈடுபட்டிருந்த சபா மின்சாரத் துறை ஊழியர் ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
மீட்புக் குழுக்களும் அதிகாரிகளும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள வேளையில் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊழியரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுதான் இப்போது எங்கள் முன்னுரிமை. அதே நேரத்தில் அவரது குடும்பத்திற்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
சபா மின்சார வாரியம் இந்த தேடுதல் நடவடிக்கையில் அதிகாரிகளுடன் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றும். மேலும் ஆகக்கடைசி நிலவரங்களை அவ்வப்போது வழங்கும் என்று அந்நிறுவனம் கூறியது.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் தனிமைக்கு இடமளிக்கும்படி அது வலியுறுத்தியது.
முன்னதாக, நான்கு சக்கர இயக்க வாகனம் ஒன்று பலத்த வெள்ளத்தில் சிக்கியதைக் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
கோத்தா கினாபாலுவிலிருந்து தெற்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெனிங்காவ் கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தக் குழு பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் முகமட் பிசார் அஜிஸைத் தொடர்பு கொண்டபோது, பாதிக்கப்பட்டவர் 30 வயதுடையவர் என்பதை உறுதிப்படுத்தினார்.
சம்பவம் குறித்து இரவு 9.47 மணிக்கு தனது துறைக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இரவு 10.24 மணிக்கு அபினில் உள்ள கம்போங் நுண்டுனானில் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.