ஷா ஆலம், செப். 12 - தென் இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் உருவாக்கப்படும் அமராவதி புதிய நிர்வாகத் தலைநகர் திட்டத்தில் பங்கேற்க மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த அமராவதி தலைநகர் திட்டத்தில் ஹோட்டல், உயர்கல்விக் கூடங்கள் போன்ற திட்டங்களில் மலேசியர்கள் பங்கேற்க அம்மாநில அரசு ஊக்குவிப்பதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
நேற்று இங்குள்ள சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமராவதி – மலேசியா முதலீட்டாளர் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது என்று மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய பேட்டியில் அவர் சொன்னார்.
தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கான தகவல் தொடர்பு துணை இயக்குநரும் முதலீட்டுத் தலைவருமான திரு. சித்தார்த்த வர்மா தலைமையிலான ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் (APCRDA) பிரதிநிதிகள் குழுவுடனான இச்சந்திப்புக்கு பாப்பாராய்டு தலைமை தாங்கினார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், மலேசிய ஆந்திரா வர்த்தக சபையின் (My-ACC) ரவீந்திரன் வெங்கடசாமி மற்றும் சத்தியாராவ் வெங்கடசலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் 20க்கும் மேற்பட்ட மலேசிய நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வணிக சபை பிரதிநிதிகளும் பங்கேற்றதாக கூறிய பாப்பராய்டு சர்வதேச கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கும் முதலீட்டு வாய்ப்புகளை எளிதாக்குவதற்கும் சிலாங்கூரின் உறுதிப்பாட்டை தாம் இச்சந்திப்பில் மீண்டும் உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அமராவதி தலைநகர நகர மேம்பாட்டுத் திட்டம் குறித்து சித்தார்த்த வர்மாவின் விரிவான விளக்கக்காட்சி இடம்பெற்றது. இது மலேசிய பங்குதாரர்களுக்கு பரந்த அளவிலான சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துக்காட்டியது.
இன்வெஸ்ட் சிலாங்கூர் முதலீட்டு அமைப்பின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சிலாங்கூர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு இடையே விவேக ஒத்துழைப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர் என்று அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் குறிப்பிடத்தக்க விளைவாக இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அமராவதி நகரத்தைப் பார்வையிட மலேசியக் குழுவிற்கு சித்தார்த்த வர்மா அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆந்திர பிரதேசத்திலிருந்து தெலுங்கானா பிரிந்த போது ஆந்திராவின் தலைநகரான ஹைதரபாத்தும் அம்மாநிலத்திற்கு சொந்தமாகி விட்டது. இந்நிலையில் ஆந்திர பிரதேசத்திற்காக புத்ரா ஜெயா போன்ற புதிய தலைநகரை உருவாக்கும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் மலேசிய முதலீட்டாளர்கள் பங்கேற்பதற்குரிய வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த மாதம் ஐ.ஜே.எம். இகோ வோர்ல்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமையேற்று நான் ஆந்திர பிரதேசம் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் என்று பாப்பாராய்டு கூறினார்.