கோலாலம்பூர், செப். 12 - சபா மாநிலத்தில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுவது உள்பட அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றி நடக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதே சமயம் மீட்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தும்படி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மேலும், நிலைமை சீரடையும் வரை பாதிக்கப்பட்டவர்களின் நலனை காக்கும் அதேவேளையில் அவர்களுக்கு முறையான தங்குமிடங்களையும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சபாவில் மோசமடைந்து வரும் வெள்ள நிலைமை குறித்து நாம் மிகவும் கவலை கொண்டுள்ளேன். பெனாங்பாங் மற்றும் பியூபோட்டில் 400 பேருக்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேறி நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
சபாவில் இன்று காலை நிலவரப்படி 110 குடும்பங்களைச் சேர்ந்த 409 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 54 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேராக இருந்தது.