பெட்டாலிங் ஜெயா, செப். 10 - மத்திய கிழக்கில் வசிப்பதாகக் கருதப்படும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹிடின் யாசினின் மருமகனும் தொழிலதிபருமான டத்தோஸ்ரீ முகமது அட்லான் பெர்ஹானின் இருப்பிடம் குறித்த தகவல்களை பெற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தீவிரமாக முயன்று வருகிறது.
நேற்று வரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சரியான இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
அமைச்சின் திட்டத்துடன் தொடர்புடைய ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அட்லானின் அனைத்துலக கடப்பிதழை ரத்து செய்யுமாறு உள்துறை அமைச்சிடம் ஆணையம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அவர் மத்திய கிழக்கு நாடொன்றில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அந்த நாட்டின் பெயரை என்னால் வெளியிட முடியாது. ஆனால், அந்த நாட்டுடன் எங்களுக்கு குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் இல்லை. ஆனால், அவரை மலேசியாவிற்கு எப்படி மீண்டும் கொண்டு வருவது என்பது குறித்து அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறோம் என அவர் கூறினார்.
இன்று எம்.ஏ.சி சி. மற்றும் அங்கத்தான் கோப்பராசி கெபாங்சான் மலேசியா பெர்ஹாட் (அங்காசா) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கிற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
அமைச்சின் கீழ் வெளிநாட்டு தொழிலாளர்களின் பதிவு, ஆட்சேர்ப்பு மற்றும் பயோமெட்ரிக் தரவு சேமிப்பு சம்பந்தப்பட்ட ஒரு திட்டத்தின் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக எம்.ஏ.சி சி.
இரண்டு உள்நாட்டு ஆடவர்களைத் தேடி வருவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அட்லான் மற்றும் வழக்கறிஞர் மன்சூர் சாத் என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் இருவரும் முறையே 2023ஆம் ஆண்டு
மே 17 மற்றும் 21ஆம் தேதிகளில் மலேசியாவை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
அட்லானின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிய இன்டர்போல் மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களுடன் எம்.ஏ.சி சி. இணைந்து செயல்பட்டு வருவதாக அசாம் மேலும் கூறினார்.
மத்திய கிழக்கில் மறைந்துள்ளதாக சந்தேகம்- மொஹிடின் மருமகனை தேடுவதில் எம்.ஏ.சி.சி. தீவிரம்
10 செப்டெம்பர் 2025, 9:45 AM