கோலாலம்பூர், ஆகஸ்ட் 26: கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் பணியாற்றும் மூத்த ஜூசா B தர அதிகாரி உட்பட மூன்று நபர்களை 2014 முதல் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
நிறுவன உரிமையாளரான ஆண் ஒருவர் மற்றும் 40 வயதுடைய பெண் ஆகிய இருவர் MACC புத்ராஜெயா தலைமையகம் மற்றும் MACC கோலாலம்பூர் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கத் வந்த போது கைது செய்யப்பட்டனர்.
மேலும், பிபிடியில் பணியாற்றும் 50 வயதுடைய ஆண் சந்தேக நபர் அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.
"மூன்று சந்தேக நபர்களும் 2014 முதல் ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளரான சந்தேக நபர், உள்ளூர் அரசாங்கத்தில் திட்டப் பணிகளை பெற உதவியதற்காகப் பிபிடி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
"மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, MACC சுமார் RM150,000 ரொக்கம், நான்கு தொலைத்தொடர்பு சாதனங்கள், இரண்டு Lexus RX500H மற்றும் மினி கூப்பர் வாகனங்கள், ஹெர்ம்ஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டன் கைப்பைகள், காலணிகளையும் பறிமுதல் செய்தது," என்று தெரிவிக்கப்பட்டது.
RM7 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான 19 வங்கிக் கணக்குகளையும் MACC முடக்கியுள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ சைஃபுல் எஸ்ரால் அரிஃபினைத் தொடர்பு கொண்டபோது, மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16(a)(B) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
- பெர்னாமா