கோலாலம்பூர், ஆக. 19 - உலகளாவிய புவிசார் அரசியலில் காணப்படும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தவும் தேசிய பாதுகாப்புத் தயார் நிலையை வலுப்படுத்தவும் மடாணி அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முக்கிய கவனம் பெறும்.
இன்றைய அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) அல்லது பிற நிறுவனங்கள் மூலம் சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை முழுமையாக முன்னெடுப்பதில் அரசாங்கம் செலுத்தி வரும் கவனம் குறித்து சுங்கை சிப்புட் தொகுதி பக்கத்தான் உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் பிரதமரிடம் கேள்வியெழுப்புவார்.
உலகளாவிய மற்றும் பிராந்திய புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்வதில் நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை விளக்குமாறு பாசீர் மாஸ் பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் அகமது ஃபாட்லி ஷாரி பிரதமரைக் கேட்டுக் கொள்வார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் வரை நிலுவையில் உள்ள 11,000 குடியுரிமை விண்ணப்பங்களைத் தீர்ப்பதில் காணப்பட்ட முன்னேற்றம் மற்றும் தோல்வியுற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதற்கான குறுகிய கால நடவடிக்கைகள் குறித்து பக்ரி தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் டான் ஹாங் பின் உள்துறை அமைச்சரிடம் வினவுவார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் 500 கோடி வெள்ளிக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய 400,000 தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தில் (பி.டி.பி.டி.என்.) கடன் பெற்றவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கெப்போங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் லிம் லிப் எங் உயர் கல்வியமைச்சரிடம் விளக்கம் கோருவார்.
பரம ஏழைகளுக்கு இலக்கு வைக்கப்பட்ட பி.டி.பி.டி.என். கடன் தள்ளுபடிகளை வழங்க அமைச்சு திட்டமிட்டுள்ளதா என்றும் லிம் கேட்பார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட உள்ளடக்கத்தை லேபிளிட வேண்டும் என்று சட்டம் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்தும் ஜெம்புல் தொகுதி பாரிசான் உறுப்பினர் ஷம்சுல்கஹர் முகமட் டெலி தகவல் தொடர்பு அமைச்சரிடம் கேட்பார்.
கேள்வி பதில் அமர்வைத் தொடர்ந்து, 13வது மலேசியத் திட்டம் குறித்து தொடர்புடைய அமைச்சர்களின் நிறைவு உரைகளுடன் மக்களவை மீண்டும் தொடங்கும்.
இன்றைய மக்களவைக் கூட்டத்தில் இந்தியர்களின் சமூகப்பொருளாதார நிலை குறித்து விவாதிக்கப்படும்
19 ஆகஸ்ட் 2025, 4:16 AM