ஷா ஆலம், ஜூலை 30 - ரவாங்கில் உள்ள எம் ரெசிடென்ஸ் 2 எனும் பகுதியில் நான்கு ஏக்கர் பரப்பளவில் செயல்பட்ட சட்டவிரோத குப்பை அழிப்பு மையத்தில் ஏற்பட்டத் தீயை அணைக்கும் பணி தற்போது 50 விழுக்காட்டை எட்டியுள்ளது
"நேரடி தாக்குதல்" அணுகுமுறை மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடரும் வேளையில் தீயை அணைக்கும் பணி ஒரு நாளைக்கு 20 மணிநேரத்தை எட்டுவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
தீ ஏற்பட்ட பகுதிகளில் வெப்பத் திட்டுகளைக் அடையாளம் காண அகச்சிவப்பு கதிர் கண்டறிதல் சாதனம் பொருத்தப்பட்ட ட்ரோன்களை தாங்கள் பயன்படுத்துவதாக அவர் சொன்னார்.
பல்வேறு பகுதிகளில் வெப்பத் திட்டுகள் உள்ளன. மண்வாரி இயந்திரங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியும் நடந்து வருகிறது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்களைத் தவிர, நில மற்றும் சுரங்க அலுவலகம், சிலாங்கூர் மனிதாபிமான உதவி பணிக்குழு (பந்தாஸ்) மற்றும் மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) ஆகியவையும் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
இந்த தீ விபத்தினால் அருகிலுள்ள நீர் ஆதாரங்களுக்கு ஏற்படும் அபாயம் மற்றும் பாதிப்புகளை அடையாளம் காண அவ்விடத்தின் நிலைமையை தாங்கள் மதிப்பாய்வு செய்து வருவதாக சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் முன்னதாக
தெரிவித்திருந்தது.


