ஷா ஆலம், ஜூலை 28 - சிலாங்கூரில் பல காரணங்களால் பலர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சமூக பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் உள்ள வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது, வழக்கமான வருமான ஆதாரத்தை மட்டுமல்ல, வசிக்கும் இடத்தையும் இழக்கும் நபர்கள் உள்ளனர்; குறிப்பாக அரசு அல்லது முதலாளி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இந்த பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். இந்த சூழ்நிலை, குறிப்பாக போதுமான சேமிப்பு அல்லது குடும்ப ஆதரவு இல்லையென்றால் அவர்களை வறுமை மற்றும் வீடற்ற தன்மைக்கும் ஆளாக்குகிறது என்றார்.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது எனவும் அவர் விவரித்தார்.
அதில் சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியம் (LPHS) மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட ஓய்வு பெற்றவர்களுக்கு மலிவு விலை வீடுகள் அல்லது சிறப்பு வாடகை கொள்முதல் திட்டங்களின் வடிவத்தில் அரசாங்கம் உதவி வழங்கி வருகிறது.
அதுமட்டுமில்லாமல், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் பிபிஆர் வீடுகளை கட்டி வருகின்றது. இந்த வீடுகள் குறைந்த விலையில் வாடகைக்கு விடப்படுகின்றன என பாப்பாராய்டு தெரிவித்தார். அதாவது மாத வாடகை RM124 மட்டுமே என்றார். மேலும், சிலாங்கூரில் ஸ்மாட் சேவா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டை சொந்தாக்கி கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
வீடுகளையும் வருமானத்தையும் இழந்த ஓய்வு பெற்றவர்கள் ஓரங்கட்டப்படாமல், சவாலான வாழ்க்கை போராட்டத்தில் தொடர்ந்து பாதுகாப்பையும் ஆதரவையும் பெறுவதை உறுதி செய்வதற்கு இந்த விரிவான அணுகுமுறை முக்கியமானது.
அதுமட்டுமில்லாமல், சிலாங்கூர் மாநில அரசு, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, குறிப்பாக அவர்களின் பணி ஒப்பந்தங்கள் முடிவடையும் போது, வருமானம் மற்றும் தங்குமிடம் இழப்புக்கு வழிவகுக்கும் பிரச்சனையை எதிர்கொள்ளவும் துணைபுரிகிறது.
முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வீடுகளை வழங்க தோட்ட முதலாளிகளுடன் மாநில அரசு இணைந்து செயல்படுகிறது. உதாரணமாக, லாடாங் புக்கிட் ராஜாவில், 75 குடும்பங்களுக்கு தள்ளுபடி விலையில் ஒற்றை மாடி வீடுகளை சொந்தமாக்க உதவியது. கூடுதலாக, புத்ராஜெயா பகுதியைச் சேர்ந்த 393 முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக தாமான் பெர்மாத்தா டெங்கிலில் 30 ஏக்கர் நிலத்தையும் மாநில அரசு வழங்கியுள்ளது என அவர் விவரித்தார்.
இத்திட்டங்கள் யாவும் ஏழ்மை நிலையிலிருந்து மீள வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணி ஒப்பந்தங்கள் முடிவடைந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


