ஷா ஆலம், ஜூலை 28 - பரம ஏழைகள் இல்லாத மாநிலமாக சிலாங்கூரை உருவாக்க மாநில அரசு பல முயற்சிகளையும் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு மாநில அரசு குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை கொண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சமூக பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் உள்ள வீ.பாப்பாராய்டு மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சிலாங்கூரில் வறுமை விகிதம் குடும்பத் தலைவரின் வருமானத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கள சரிபார்ப்பு செயல்முறையின் மூலம் வறுமைக் கோடு அளவின் அடிப்படையில் பரம ஏழைகள் அல்லது ஏழைகள் என்ற வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட eKasih அமைப்பை அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு (ICU) உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கான சமீபத்திய வறுமைக் கோடு அளவின் அடிப்படையில் பரம் ஏழை குடும்பத் தலைவரின் வருமானம் RM1,274 மற்றும் ஏழை நிலையில் உள்ளவர்களுக்கு RM2,830ஆகவும் நிர்ணைக்கப்படுள்ளது. அது நகர்ப்புற மற்றும் கிராமப்புறம் என 2 துணை வகைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் பரம ஏழைக் குடும்பத் தலைவரின் வருமானம் RM1,274 மற்றும் கிராமப்புறங்களில் RM1,262 ஆகும். மேலும், நகர்ப்புறத்தில் ஏழ்மையில் உள்ள குடும்பத் தலைவரின் வருமானம் RM2,848 மற்றும் கிராமப்புறத்தில் RM2,421ஆக இருக்கும் என அவர் விவரித்தார்.
அவ்வப்போது eKasih தரவு தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. அந்த தரவு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக உதவி நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. eKasih அமைப்பில் உள்ளிடப்பட்ட தரவு குறைந்தது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிலையில் தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் பரம ஏழை பிரிவில் மொத்தம் 22,097 குடும்பத் தலைவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த எண்ணிக்கையில் மிக அதிகமாக பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ளனர் (67). அதனை தொடர்ந்து, கிள்ளான் (33), உலு லங்காட் (27), சபாக் பெர்ணம் (20), கோலா லங்காட் (19), கோம்பாக் (14), கோலா சிலாங்கூர் (8), சிப்பாங் (3) ஆகிய மாவட்டங்கள் அடங்கும் என்றார்.
நகர்ப்புறங்களில், ஏழைக் குடும்பங்கள் பெரும்பாலும் சிறு வணிகர்கள், இரவு சந்தை வர்த்தகர்கள், உணவு விற்பனையாளர்கள் மற்றும் சிறு அளவிலான சலவைத் தொழிலாளர்கள் போன்ற முறைசாரா சேவைத் துறையில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில் கிராமப்புறங்களில் சிறு விவசாயிகள், ரப்பர் அல்லது செம்பனை தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
சில சமயம் குடும்பத் தலைவருக்கு நல்ல நிலையான வருமானம் இருப்பினும் குடும்பத்தில் நிறைய உறுப்பினர்கள் இருப்பதன் காரணத்தால் உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வருமானம் போதுமானதாக இல்லை. இந்த சூழ்நிலையில் அக்குடும்பம் ஏழை பிரிவில் இல்லாவிட்டாலும் கூட கஷ்டத்தில் வாழ வழிவகுக்கிறது.
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உதவ, அரசாங்கம் விண்ணப்பிக்கக்கூடிய பல உதவி வழிகளை வழங்கியுள்ளது. அதில் பந்துவான் தூனைய் ரஹ்மா (BTR), சமூக நலத்துறையிலிருந்து (JKM) மாதாந்திர உதவி மற்றும் மக்கள் வீட்டுவசதி திட்டம் (PPR) போன்ற திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
சிலாங்கூர் மாநில அளவில், பிங்காஸ் திட்டம், சிலாங்கூர் குழந்தை கல்வி உதவி நிதி (TUNAS) ஆகியவை இது போன்ற குடும்பங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் குடும்ப வருமானத்தை அதிகரிக்க விரும்பும் நபர்கள் புளூபிரிண்ட் வறுமை ஒழிப்பு வணிக உபகரண உதவித் திட்டம், பண்டிக்கை காலங்களில் ஜோம் ஷாப்பிங் வவுச்சர் விநியோகம் திட்டம், இந்திய சமூகத்திற்கான உபகரண உதவி (iSEED) ஆகிய திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என அவர் பகிர்ந்து கொண்டார்.
இதுபோன்ற திட்டங்கள் மாநில அரசு மக்கள் மீது பரிவு மற்றும் அக்கறை கொண்டுள்ளதை வெளிப்படையாகக் காட்டுகிறது என பாப்பாராய்டு கூறினார்.


