ஷா ஆலம், ஜூலை 28 - கடந்த சனிக்கிழமை மிட்லண்ஸ் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ள மலேசியாவின் பல மாநிலங்களிலிருந்து வருகை புரிந்த சில மாணவர்களும், பெற்றோர்களும் அவர்களின் அனுபவத்தை மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டனர்.
சதுரங்க விளையாட்டின் மீது 8 வயது முதலே தான் ஆர்வம் கொண்டிருந்ததாக மிட்லண்ஸ் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்ட தெலுக் பங்லிமா காராங் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவி ஹனித்ரா கூறினார். இந்த விளையாட்டில், மேலும் தேர்ச்சி பெற தான் இணையம் வழி கூடுதல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பல நுண்ணங்களை கற்று வருவதாக அம்மாணவி தெரிவித்தார். இதுவரை பல சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று உள்ளதாகவும், தனது குடும்பத்தார் தன்னுடைய திறமையை மேலும் ஊக்கப்படுத்த தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் விவரித்தார்.
சதுரங்க விளையட்டில் தான் ஈடுபட முதலில் பிள்ளையார் சுழி போட்டது தனது தாய் என பகாங்கில் அமைந்துள்ள காராக் தமிழ்ப்பள்ளியில் பயின்று வரும் மாணவி சர்வேதனா கூறினார். ஆறு வயது முதலே தனது தாய் இந்த விளையட்டை தனக்கு கற்று தந்து வருவதாக அம்மாணவி தெரிவித்தார். மேலும், இணையத்தில் உள்ள சதுரங்க விளையாட்டு தொடர்பான பல காணொளிகளையும் பார்த்து இந்த விளையாட்டில் நுணுக்கங்களை தான் கற்று வருவதாக சர்வேதனா விவரித்தார். இதற்கு முன் பல சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருப்பதாக அம்மாணவி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்ட வேளை இந்த மிட்லண்ஸ் சதுரங்கப் போட்டிக்கு முதல் முறையாக வருவதாகவும், இதன் வழி தான் பல அனுபவங்களை பெற்றதாகவும் சொன்னார்.
திரு திருமதி கலைக்குமார் மற்றும் சர்மிளா தம்பதினர், லாடாங் பாதாக் ரபிட், தெலோக் இந்தான், பேராக்கில் பயிலும் தனது மகன் சாத்விக் 8 வயது முதல் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த விளையாட்டு தங்கள் மகன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் பண்பை வளர்க்க பெரிதும் துணைப்புரிவதாகக் கூறினர். தனது மகனின் இலட்சியத்திற்கு துணை நிற்கும் வகையில் கடந்த மூன்று வருடங்களாக மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெறும் சதுரங்கப் போட்டிக்கு வருகை புரிகின்றனர்.
இதற்கிடையில், பல சவால்களை எதிர்கொண்டு ஜோகூரிலிருந்து இந்த சதுரங்க போட்டியில் கலந்து கொள்ள தன் மகனுடன் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு வந்ததாக திருமதி சுகந்தி தெரிவித்தார். கடந்த 2022 ஆண்டிலிருந்து தனது மகன் சதுரங்கப் விளையாட்டில் ஈடுபடுவதாக அவர் விவரித்தார். பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்து இருந்தபோதிலும் தனது மகன் விடாமுயற்சியுடன் தொடர்ந்து சதுரங்க விளையாட்டில் சாதிக்க பாடுபடுவதாக அவர் பெருமையாகக் கூறினார். தனது மகனின் கனவுக்கு தான் என்றும் ஆதரவாக இருப்பதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆகவே, சதுரங்க விளையாட்டு மாணவர்களிடையே பல நற்பண்புகளை வளர்க்க உதவுகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் தங்கள் பிள்ளைகள் ஈடுபடுவதை பொற்றோர்கள் எப்பொழுதும் ஊக்குவிக்க வேண்டும். இது அவர்கள் தங்களின் கல்வியிலும் வாழ்க்கையிலும் சிறந்த விளங்க உதவும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.


