(ஆர்.ராஜா)
கிள்ளான், ஜூலை 25 - கிள்ளான், லிட்டில் இந்தியாவில் உள்ள பூக்கடை
வியாபாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு
காண்பதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்று செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
இந்திய சமூகத்தின் பாரம்பரிய வியாபாரமாகவும் சமய அடையாளமாகவும்
விளங்கும் இந்த பூ வியாபாரத்தை இங்குள்ள வியாபாரிகள் எந்த
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறையாகவும் எந்த இடயூமின்றியும்
மேற்கொள்வதை உறுதி செய்யும் கடப்பாட்டை மாநில அரசு
கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் இந்திய சமூகத்திற்கான
சிறப்பு அதிகாரி என்ற முறையில் பூ வியாபாரிகள் எதிர்நோக்கும்
பிரச்சனைகள் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து
வியாபாரிகள் மற்றும் கிள்ளான் அரச மாநகர் மன்ற (எம்.பி.டிகே.)
அதிகாரிகளுடன் அண்மையில் சிறப்பு சந்திப்புக்கு ஏற்பாடு
செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அச்சந்திப்பின் போது பல்வேறு பிரச்சனைகளை பூ வியாபாரிகள்
முன்வைத்தனர். குறிப்பாக, இணையம் வழி மேற்கொள்ளப்படும்
லைசென்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் தங்களுக்கு
சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் அவர்களில் பல வயது
கடந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் பிடிபடாத
ஒன்றாக உள்ளது. ஆகவே, இத்தகைய தரப்பினருக்கு உதவும் வகையில்
சிறப்பு முகப்பிடத்தை மாநகர் மன்ற அலுவலகத்தில் ஏற்படுத்தித் தருவது
தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டது என குணராஜ் கூறினார்.
மேலும், இங்குள்ள வியாபாரிகள் மத்தியில் காணப்படும் கருத்து
வேற்றுமைகளைக் களைந்து அவர்களுக்கிடையே ஒற்றுமையை
ஏற்படுத்தும் நோக்கில் அந்த வியாபார மையத்திற்கு தலைவரை
நியமிப்பதற்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
சிறு வியாபாரிகளின் நலன் கருதி மாதம் 75 வெள்ளி வாடகையில் இந்த
கடைகளை மாநகர் மன்றம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இருப்பினும், இங்கு
பொது கழிப்பறை இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதற்கு தீர்வு
காணும் வகையில் அருகில் தெனாகா நேஷனலுக்கு சொந்தமான இடம்
அடையாளம் காணப்பட்டு உரிய அனுமதி பெறுவதற்கான முயற்சி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
இது தவிர, மாநகர் மன்றத்திற்கு சொந்தமான கடைகளில் அந்நிய
நாட்டினரை வேலைக்கமர்த்துவதற்கு கடந்த ஜூன் முதுல் தேதி தொடங்கி
தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டினரை மட்டுமே வேலைக்கு
அமர்த்த வேண்டும் என்பதோடு கடை முதலாளிகளும் முடிந்த வரை
வியாபார இடத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றார்
அவர்.
இங்கு பூ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நமது சமூகத்தினர் தங்கள்
வர்த்தகத்தை மேலும் விரிவாக்குவதற்கு உதவும் பொருட்டு தெக்குன்
நேஷனல் வர்த்தக கடனுதவி அமைப்புடன் சிறப்பு விளக்கமளிப்புக்
கூட்டத்தை அடுத்த வாரம் நடத்துவதற்கும் தாங்கள் ஏற்பாடு செய்து
வருவதாக குணராஜ் தெரிவித்தார்.
இது தவிர, கிள்ளான் சற்றுலா மையமாக விளங்குவதால் இங்குள்ள
வர்த்தக மைய உரிமையாளர்கள் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்
என்பதோடு கடைகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டும் எனவும்
கேட்டுக் கொண்டோம். இந்நோக்கத்தின் அடிப்படையில் கிள்ளான் லிட்டில்
இந்தியா பகுதியில் மாபெரும் கூட்டுத் துப்புரவு இயக்கத்தை
நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம் என சொன்னார்.
கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர் ரோய் ஞானேஸ்வரன் சுப்பிரமணியம்
ஏற்பாடு செய்த இந்த சந்திப்பில் பூ வியாபாரிகளோடு மாநகர் மன்றத்தின்
லைசென்ஸ் மற்றும் சொத்து மதிப்பீடு மற்றும் மேலாண்மை துறை அதிகாரிகளும் செந்தோசா தொகுதிக்கான இந்திய சமூகத் தலைவர்களான எம். தென்னரசு மற்றும் பி.நரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


