ஷா ஆலம், ஜூலை 25: நேற்று தொடங்கி 27 வரை ஷா ஆலமில் உள்ள பி.கே.என்.எஸ் வளாகத்தில் நடைபெறும் சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் (SCBF) கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி, கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் அனைத்து வயதினருக்கும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற பல்வேறு சுவரஸ்யமான நடவடிக்கைகள் கூடிய பரந்த அளவிலான புத்தகங்களை வழங்குகிறது.
நடவடிக்கைகள் பின்வருவன
– கலை மற்றும் கைவினை நடவடிக்கைகள்
– கதை சொல்லுதல் மற்றும் கதையாசிரியரைச் சந்திக்கும் அமர்வுகள்
– சிறப்பு குழந்தைகள் நிகழ்ச்சிகள்
– அதிர்ஷ்டக் குலுக்கு மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகள்
– சிறப்பு தள்ளுபடியுடன் புத்தக விற்பனை
“சிறு வயதிலிருந்தே வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் அதே வேளையில், குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட இந்த கண்காட்சி சிறந்த வாய்ப்பாகும்” என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகம் முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த நான்கு நாள் கண்காட்சியில் சுமார் 100 வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் கலந்துகொள்வார்கள் மற்றும் 90,000 பார்வையாளர்கள் வருகை புரிவார்கள் என்று PPAS நிறுவனப் பிரிவுத் தலைவர் ஜஃப்ருல்லா அரிஸ்
தெரிவித்தார்.
சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி, குழந்தைகளிடையே வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும், புத்தகத் துறையில் வகைகள் மற்றும் அணுகுமுறைகளைப் பன்முகப்படுத்துவதற்கும் PPAS மேற்கொண்டுள்ள முயற்சிகளின் தொடர்ச்சியாகும்.
2006ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியை சிலாங்கூர் மாநிலம் ஏற்பாடு செய்யத் தொடங்கியது. பின்னர் 2022ஆம் ஆண்டு தொடங்கி அது சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) என மறுபெயரிடப்பட்டது.


