ஷா ஆலம், ஜூலை 23 - இங்குள்ள செக்சன் 15, டத்தாரான்
ஆட்டோமோபில் வர்த்தக மையம் மீது ஷா ஆலம் மாநகர் மன்றம் நேற்று
அதிரடிச் சோதனை மேற்கொண்டது. இச்சோதனையின் போது அந்நியர்கள்
வியாபாரம் நடத்த அனுமதித்தது உள்பட லைசென்ஸ் விதிகளை
மீறியதற்காக ஆறு கடைகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.
மூட உத்தரவிடப்பட்ட வர்த்தக வளாகங்களில் நான்கு மளிகைக் கடைகள்,
இரண்டு உணவகங்கள் மற்றும் ஒரு கார் கழுவும் மையம் ஆகியவையும்
அடங்கும் என்று ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி
முகமது யாத்திம் கூறினார்.
அந்நியர்களால் நடத்தப்பட்டது, உயிருள்ள விலங்கினங்களை விற்பனை
செய்தது மற்றும் முறையான லைசென்ஸ் இன்றி செயல்பட்டது ஆகிய
குற்றங்களுக்காக அந்த வர்த்தக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டது
என அவர் சொன்னார்.
இதன் தொடர்பில் விரிவான விளக்கத்தை அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட
கடை உரிமையாளர்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மலேசிய குடிநுழைவு இலாகாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த
சோதனை நடவடிக்கையில் மொத்தம் 89 வர்த்தக வளாகங்கள் சோதனை
செய்யப்பட்டன என்று இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைக்குப்
பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வர்த்தக வளாகங்களுக்கு எதிராக 2007ஆம் ஆண்டு வர்த்தக
மற்றும் தொழில்துறை (எம்.பி.எஸ்.ஏ.) லைசென்ஸ் துணைச்சட்டம் மற்றும்
2007ஆம் ஆண்டு உணவு வர்த்தக துணைச் சட்டம் (எம்.பி.எஸ்.ஏ.)
ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த சோதனை நடவடிக்கையில் மாநகர் மன்றத்தின் 150 அமலாக்க
அதிகாரிகளோடு சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறையின துணை இயக்குநர் (கட்டுப்பாடு) முகமது குசைரி கமாருடின் தலைமையில் 27 குடிநுழைவு அதிகாரிகளும் பங்கேற்றனர்.


