அலோர் ஸ்டார், ஜூலை 21- வலுவான ஆற்று நீரோட்டத்தில் சிக்கிய ஐந்து சிறார்கள் உட்பட 12 பேரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் வெற்றிகரமாக மீட்டனர். இச்சம்பவம் குபாங் பாசு, சாங்லூனில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
பலத்த நீரோட்டம் காரணமாக பாதிக்கப்பட்டக் குழுவினர் வனப்பகுதியில் சிக்கி ஆற்றைக் கடக்க முடியாமல் தவிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு 8.24 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் இரு ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து சிறார், சிறுமிகள் அடங்கிய நான்கு குடும்பத்தினர் ஆற்றின் மறுபுறத்தில் சிக்கிக்கொண்டுள்ளதைக் கண்டனர். வலுவான நீரோட்டம் காரணமாக அவர்களால் ஆற்றைக் கடக்க முடியவில்லை.
ஆற்று நீர் குறையத் தொடங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மறுபுறம் கொண்டு செல்ல தீயணைப்பு வீரர்கள் கயிறுகளைப் பயன்படுத்தினர். பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்புடன் இருந்ததோடு அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கை கூறியது.
புக்கிட் காயு ஹீத்தாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் இரண்டு இயந்திரங்களுடன் பங்கேற்ற இந்த மீட்பு நடவடிக்கை இரவு 9.38 மணிக்கு முழுமையாக முடிவடைந்தது.


