ஷா ஆலம், ஜூலை 19- இங்குள்ள செக்சன் 24, ஜாலான் சிலி மேராவில் கால்வாயில் தவறி விழுந்ததாக நம்பப்படும் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தமது துறைக்கு இரவு 7.19 மணிக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து நிமிடங்களில் மீட்புக் குழு சம்பவ இடத்தை சென்றடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
சம்பவ இடத்தில் 12 மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுவர்கள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்விரு சிறார்களும் இறந்துவிட்டதை சம்பவ இடத்திலிருந்த சுகாதார அமைச்சின் பணியாளராகள் உறுதி செய்தனர். அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் நேற்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இந்த நடவடிக்கை இரவு 8.08 மணிக்கு முடிவடைந்ததாக
முக்லிஸ் கூறினார்.



